Friday, 20 January 2012

உடுமலையில் பதட்டம் மாணவன் மர்மச்சாவு

                                       
உடுமலை அருகே உள்ள முண்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். விவசாயி. இவரது மகன் கிருஷ்ணகுமார் (15). இவன் உடுமலை - திருப்பூர் ரோட்டில் உள்ள ஆர்.கே.ஆர். பள்ளியில் 10 - ம் வகுப்பு படித்து வந்தான்.
 
விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தான்.நேற்று இரவு பள்ளி விடுதியில் மாணவன் கிருஷ்ண குமார் திடீரென மயங்கி விழுந்தான். உடனே பள்ளி நிர்வாகத்தினர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் மாணவன் கிருஷ்ணகுமார் இறந்து விட்டான்.
 
இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். மாணவன் இறந்த தகவல் கிடைத்ததும் கிருஷ்ண குமாரின் தாய் பாலாமணி மயங்கி விழுந்து விட்டார்.
 
ஒரே மகனை பறி கொடுத்து விட்டோமே என பெற்றோர் அழுது புரண்டனர். கிருஷ்ணகுமார் பள்ளியில் வைத்தே இறந்ததாகவும் பள்ளி நிர்வாகம் சிகிச்சைக்கு கொண்டு செல்வதாக கூறி தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அலைக்கழித்ததாகவும் கூறினார்கள். மேலும் மாணவன் உடலில் காயம் இருப்பதாகவும் அவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் கிருஷ்ணகுமாரின் சித்தப்பா அப்புக்குட்டி குற்றம் சாட்டினார்.
 
மாணவன் சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிருஷ்ண குமாரின் உறவினர்கள் உடுமலை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொள்ளாச்சி, திருப்பூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியல் இரவு 11 மணி வரை நீடித்தது. மறியலின் போது அரசு ஆஸ்பத்திரி மீது கல் வீசப்பட்டது. இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
 
போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன் பின்னர் கலைந்து சென்ற உறவினர்கள் இன்று காலையும் அரசு ஆஸ்பத்திரி முன் குவிந்தனர். தொடர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இதனால் பரபரப்பு உருவானது. தகவல் கிடைத்ததும் தாராபுரம் ஆர்.டி.ஒ. அழகு மீனா,பல்லடம் டி.எஸ்.பி. முருகானந்தம், தாராபுரம் டி.எஸ்.பி. கந்தசாமி, தாசில் தார் நல்லசாமி, இன்ஸ்பெக்டர்கள் சோம சுந்தரம், முருகையா, கனகராஜ் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் போராட்டத்தை மாணவர் கிருஷ்ணகுமாரின் உறவினர்கள் கை விட வில்லை.
 
இந்த நிலையில் மாணவன் கிருஷ்ணகுமார் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் உடலை வாங்க கிருஷ்ண குமாரின் உறவினர்கள் மறுத்து விட்டனர். மாணவன் சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகியை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிணத்தை இங்கேயே வைத்து கொள்ளுங்கள் என்றனர். அவர்களிடம் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம், மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகவேலு, தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ, பொன்னுசாமி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
 
மாணவர் சாவு காரணமாக பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் மீதும், விடுதி காப்பாளர் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அவர்களை போலீசார் விரட்டி, விரட்டி அடித்தனர். இதில் மறியலில் ஈடுபட்ட ஒருவரின் மண்டை உடைந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். போலீசார் தடியடி நடத்தியதும் மாணவர்களின் உறவினர்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். அப்போது ஒரு பெண் அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது கல்வீச ஓடிச் சென்றார்.
 
பஸ்சின் பின் பக்க கண்ணாடியை உடைக்க முயன்ற போது அவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர். தடியடி சம்பவத்தால் மறியலில் ஈடுபட்டவர்கள் தலை தெறிக்க ஓடியதால் அவர்களின் செருப்புகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. சற்று நேரத்தில் மாணவர் கிருஷ்ணகுமாரின் உறவினர்கள் மீண்டும் அங்கு வந்தனர். பொள்ளாச்சி, திருப்பூர் ரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் எவ்வளவோ சமாதானம் பேசியும் ஏற்றுக் கொள்ளவில்லை.
 
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதற்காக போலீசார் அவர்களை அரண் போல் சுற்றி வளைத்து இருந்தனர். இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சண்முக வேலு, பொன்னுசாமி ஆகியோர் உடுமலை - திருப்பூர் ரோட்டில் உள்ள ஆர்.கே.ஆர். பள்ளிக்கு பேச்சு வார்த்தை நடத்த சென்றனர். பேச்சு வார்த்தையின் முடிவு உடனடியாக தெரிய வில்லை.

No comments:

Post a Comment