Thursday, 29 December 2011

ஏ.டி.எம்., மெஷினை உடைத்து திருட முயற்சி :திருப்பூரில் துணிகர சம்பவம்

                         

திருப்பூர் பி.என்., சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம்., மெஷினை உடைத்து, மர்ம நபர்கள் பணத்தை திருட முயற்சித்துள்ளனர். திருப்பூர் பி.என்., சாலை, மில்லர் பஸ் ஸ்டாப் அருகில் "ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானிர் அண்டு ஜெய்ப்பூர்' வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., சென்டர் உள்ளது; இரண்டு ஏ.டி. எம்., மெஷின்கள் உள்ளன; பாதுகாவலர் வசதி இல்லை. 27 ஆம் தேதி நள்ளிரவு, ஏ.டி.எம்., மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு மெஷினை உடைத்து, பணத்தை திருட முயற்சித்தும் முடியாததால் சென்று விட்டனர். 28ஆம் தேதி, வங்கி மேலா ளர் ராம்குமார் ஆய்வு செய்த போது, மெஷின் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ரேகையை பதிவு செய்தனர். ஒரு ஏ.டி.எம்., மெஷினில் இருந்த 29 லட்சத்து 85 ஆயிரத்து 800, அதே அறையின் மற்றொரு மெஷினில் இருந்த 13 லட்சத்து 14 ஆயிரத்து 200 ரூபாய் தப்பியது.

ரேஷன் கார்டு புதுப்பிக்க வேண்டுகோள்

ரேஷன் கடைகளில், குடும்ப அட்டையில் பதிவு செய்வதற்குரிய விவரங்களை அளிக்க வேண்டும்,' என கலெக்டர் மதிவாணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள், அடுத்தாண்டு டிச., 31 வரை செல்லத்தக்கதாக அரசு அறிவித்துள்ளது. அட்டையில் உள்ள உள்தாளில் 2012 என்று முத்திரையிடப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அடிப்படையில் குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கலாம். இந்த அட்டைகளை புதுப்பிக்க கொண்டு செல்லும்போது, உரிய மாற்றங்களை மேற்கொள்ளலாம்.அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர் பெயர், முகவரி மாற்றம், பிழை திருத்தம், நபர் சேர்த்தல், நீக்கம் செய்தல், காஸ் சிலிண்டர் விவரம் ஆகியவற்றை வாய்மொழியாகப் பெற்று அட்டையில் தகவலை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விவரங்களின் அடிப்படையில் தல விசாரணை செய்து, குடும்ப அட்டையில் பதிவு செய்யப்படும். இப்பணி, வரும் ஜன., மற்றும் பிப்., மாதம் வரை நடக்கும்.குடும்ப தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர் ரேஷன் கடைக்கு பொருள் வாங்க அல்லது அட்டையை புதுப்பிக்கச் செல்லும்போது, அங்குள்ள ஊழியரிடம் வாய்மொழியாக அத்தகவல்களை தெரிவித்தால் போதும். கடையில் உள்ள பதிவேட்டில் விவரங்கள் பதியப்பட்டு, கையொப்பம் அல்லது விரல் ரேகை பதியப்படும். அதன்பிறகே அட்டை புதுப்பித்ததாக கருதப்படும், என்று கூறியுள்ளார்.

அவிநாசியில் நடந்த மினி மாரத்தான் போட்டி

அவிநாசியில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் கண்ணன், பத்மாவதி ஆகியோர் முதலிடம் பெற்றனர். அவிநாசி போக்குவரத்து போலீஸ், சாந்தி வித்யாலயா, மனித உரிமைகள் கழகம் இணைந்து மினி மாரத்தான் போட்டியை நேற்று நடத்தின. அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கி, மங்கலம் ரோடு, பைபாஸ் ரோடு, திருப்பூர் ரோடு வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பந்தய தூரமான 5.6 கி.மீட்டரை, கோவை சத்ரபதி சிவாஜி விளையாட்டு கழகத்தை சேர்ந்த கண்ணன், 20 நிமிடத்திலும், பத்மாவதி 23 நிமிடத்திலும் கடந்து முதலிடத்தை பெற்றனர். ஆண்கள் பிரிவில், அதே கழகத்தை சேர்ந்த நாகலிங்கம், சந்திரகுமார், தயாளன், தீனதயாளன் ஆகியோர் முறையே இரண்டாவது முதல் ஐந்தாமிடம் வரை பிடித்தனர். பெண்கள் பிரிவில் இரண்டு, மூன்றாம் இடத்தை கிருத்திகா, நர்மதா ஆகியோரும், நான்காம் இடத்தை பெரியாயிபாளையம் திருவள்ளுவர் பள்ளி மாணவி திவ்யா, ஐந்தாமிடத்தை மிதுன் பிருந்தா ஆகியோர் பெற்றனர்.ஒவ்வொரு பிரிவிலும் முதலில் வந்த 20 வீரர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி., பாலகிருஷ்ணன், பேரூராட்சி தலைவி ஜெகதாம்பாள், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆனந்தகுமார், சாந்தி வித்யாலயா தாளாளர் மோகன்குமார், மனித உரிமைகள் கழக தலைவர் செல்வராஜ் ஆகியோர் கோப்பை, சான்றிதழ் வழங்கினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சேகர் நன்றி கூறினார். மினி மாரத்தான் போட்டியை துவக்கி வைத்ததோடு, எஸ்.பி., பாலகிருஷ்ணனும் போட்டி தூரத்தை ஓடி, வீரர்களுக்கு உற்சாகமளித்தார். போட்டியில் உற்சாகமாக பங்கேற்ற முகிலன் (10), ராஜேஷ்குமார் (11) ஆகிய சிறுவர்களுக்கும், 39 வயதான ரமேஷூக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.

கடன் மறுக்கும் வங்கி மீது கடும் நடவடிக்கை :அதிகாரிகள் எச்சரிக்கை

                                           
 காரணமில்லாமல் கல்வி கடன் மற்றும் தொழில் கடன் வழங்க மறுக் கும் அல்லது இழுத்தடிக்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வங்கியாளர் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாவட்ட அளவிலான வங்கி அலுவலர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். முதன்மை வங்கி மேலா ளர் ராஜகோபால் வரவேற்றார். திட்ட அலுவலர் சம்பத், மகளிர் திட்ட அலுவலர் ரேணுகாதேவி, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ஸ்ரீராம், கனரா வங்கி முதன்மை மேலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபால் பேசியதாவது:நடப்பு நிதியாண்டு இறுதிக்குள், "அனைவருக்கும் வங்கி சேவை' என்ற அடிப்படையில் அனைத்து குடும்பங்களும் வங்கி கணக்கு துவங்க வேண்டும். சில வங்கிகள் கல்வி கடன் இழுத்தடிப்பது தொடர் பாக மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இதுவரை 15 பேர் தங்களுக்கு வங்கி கடன் மறுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இது, வங்கிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்; வங்கிகள் கவனமாக செயல்பட வேண்டும்.அரசு வழங்கும் மானியக்கடன், கல்விக்கடன் போன்றவை இழுத்தடிப்பது குறித்து பலமுறை அறி வுறுத்தியும் சில வங்கிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றாமல் உள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் முதல்வருக்கு உரிய முறையில் புகார் செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடன் வசூலிப்பு முகாம்கள் நடத்த அரசு நிர்வாகம் தயாராக உள்ளது. வராக்கடன் குறித்து உரிய வகையில் தகவல் அளித்து, வாரம்தோறும் இம் முகாம் நடத்தப்படும், என்றார்.
கலெக்டர் மதிவாணன்பேசியதாவது:வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கருணை அடிப்படையில் கடன் வழங்க வேண்டும். மத்திய - மாநில அரசுகள், மானியம் வழங்கும் திட்டங்களின் கடன்கள் உடனடியாக வழங்க வேண்டும். கடன் விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் மறுக்கப்பட்டால், உரிய காரணங்களுடன் விண்ணப்பதார ருக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும். கடன் கேட்டு வருவோரிடம் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். வங்கி அதிகாரிகளின் நடவடிக்கைகள் சரியில்லை என்று புகார் செய்தால் கூட, பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்படும். மகளிர் குழுக்களுக்கான மானியம், சில வங்கிகள் வழங்காமல் உள்ளன; அவற்றை உடனடியாக வழங்க வேண்டும், என்றார்.

பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சு இழுபறி :வரும் 3,4ம் தேதிகளில் நடத்த அறிவுரை

                                  
திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை, கோவையில் நேற்று நடந்தது; சுமுக உடன்பாடு ஏற்படாததால், வரும் 3,4ம் தேதிகளில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் பனியன் தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தம், 2010 டிச., 31ம் தேதி காலாவதியானது. சாயத்தொழில் பிரச்னை காரணமாக, புதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. "புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்' என, உற்பத்தியாளர்களை தொழிற்சங்கங்கள் வற்புறுத்தின. கடந்த மூன்று மாதங்களில், நான்கு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் (சைமா) சங்கங்களுடன் தனித்தனியாக பேசியும், சுமுக தீர்வு எட்டப்படவில்லை. தொழிலாளர் சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி சார்பில், 21ம் தேதி அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில், கோவையில் உள்ள தொழிலாளர் நல துணை கமிஷனரிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்தது. கோவை தொழிலாளர் நல அலுவலகத்தில் நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நல அலுவலர் பாலசுப்ரமணி, உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை தனித்தனியாக அழைத்து, கருத்துக்களை கேட்டு பதிவு செய்தார். தொழிலாளர் நல துணை கமிஷனர் பாலசுந்தரம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது; இருப்பினும், இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்தகட்டமாக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துடன் 3ம் தேதியும், "சைமா' சங்கத்துடன் 4ம் தேதியும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அப்போதும் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில், 11ம் தேதி தொழிலாளர் நல அலுவலகத்தில் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொது செயலாளர் கார்த்திகேயன், துணை தலைவர் துரைசாமி, "சைமா' தலைவர்
ஈஸ்வரன், பொது செயலாளர் பொன்னுசாமி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி, ரங்கசாமி பங்கேற்றனர்.
தொழிற்சங்க பிரதிநிதிகள் மூர்த்தி, சம்பத் (சி.ஐ.டி.யு.,), பாலாமணி (ஏ.ஐ.டி.யு.சி.,), ராமகிருஷ்ணன், பாலசுப்ரமணியம், பூபதி (எல்.பி.எப்.,), முத்துக்குமாரசாமி (எம்.எல்.எப்.,), பெருமாள், ஈஸ்வரன் (ஐ.என்.டி.யு.சி.,), கண்ணபிரான், குணசேகரன் (ஏ.டி.பி.,) பங்கேற்றனர்.

Wednesday, 28 December 2011

தஞ்சை பெரியகோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

                             http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/44ca4002-feab-424a-90a1-07fd64ec65fd_S_secvpf.gif 
தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது. ராஜ ராஜசோழனால் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணியளவில் ஒரு “மர்ம” போன் வந்தது.
போனில் பேசியவர், தஞ்சை பெரிய கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிக்கும்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். உடனே பரபரப்படைந்த போலீசார் தஞ்சை கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த தகவலை தெரிவித்து உஷார் படுத்தினார்கள்.  
இதைத் தொடர்ந்து தஞ்சை டி.எஸ்.பி. ஜோஸ் தங்கையா தலைமையில் போலீஸ் படையினர் தஞ்சை பெரிய கோவிலை முற்றுகையிட்டு தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் இந்த சோதனையில் ஈடுபடுத்தபட்டனர். நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
ஆனாலும் தஞ்சை பெரிய கோவிலில் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த பட்டு உள்ளது. பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்ட்டனர். தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்ட்டனர்.  
இதற்கிடையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்த டெலிபோன் நம்பரை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாபு என்பவர் மகன் சங்கர் (36) என்பவர் தான் தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
பார்வையற்ற வாலிபரான சங்கருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் சங்கர் குடிபோதையில் போலீசுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. ஆனாலும் தொடர்ந்து சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆன்-லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்;மூன்று மாதத்தில் செயல்படுத்த திட்டம்

ஆன்-லைனில் பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடர்பாக, மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இத்திட்டத்தை, இன்னும் மூன்று மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பு சான்றிதழும், இறப்பு சான்றிதழும் மிக முக்கியம். பள்ளியில் சேரும்போது, வயதை கணக்கிடுவதற்காக, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கேட்பது வழக்கம். அதேபோல், குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால், அவரது சொத்தை பரிமாற்றம் செய்வதற்கோ அல்லது வேறு பணிகளுக்கோ இறப்பு சான்றிதழ் தேவை. மருத்துவமனையில் இறந்தால் டாக்டர்களும், வீட்டில் இயற்கையாக மரணம் அடைந்தால், அருகில் உள்ள வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் மூலம் கையெழுத்து பெற்று சான்றிதழ் தரப்படுகிறது.
பிறக்கும் குழந்தைகளில் 71 சதவீதம் பேர் கட்டாயம் பதிவு செய்கின்றனர்; இறப்பு நிகழ்ந்தால், 23 சதவீதத்தினரே பதிவு செய்கின்றனர் என்கிறது மருத்துவத்துறையின் ஆய்வு அறிக்கை. தமிழகத்தில் பிறப்பு - இறப்பு பதிவை கட்டாயமாக்க, அக்கணக்கெடுப்பை ஆன்லைனில் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணி, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்தது.
"பல ஆரம்ப சுகாதார மையங்களில் கம்ப்யூட்டர் வசதி இல்லாமல் இருப்பதால், முதலில் கம்ப்யூட்டர் தர வேண்டும்; "சர்வர்' கோளாறுகளை தவிர்க்க, "நெட்ஒர்க் கனெக் ஷன்' அவசியம். கம்ப்யூட்டரை இயக்க, சான்றிதழ் "பிரின்ட் அவுட்' எடுக்க, தனி பணியாளர் நியமிக்க வேண்டும்,' என, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு செய்த அதிகாரிகள், சான்றிதழ் வழங்கும் பொறுப்பை, பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்படி, பிறந்த குழந்தை, இறந்தவரின் முழு விவரம், அவர்களுக்காக சான்றிதழ் பெற வருபவர்களின் விவரம், தமிழக அரசால் உருவாக்கப்பட உள்ள தனி "சாப்ட்வேரில்' பதிவு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு தனி குறியீடு கொடுக்கப்படும். அவை சான்றிதழில் ஒட்டப் படும். இத்திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தானியங்கி மின்கட்டண வசூல் மையம் திறப்பு

நல்லூர் மணியகாரம்பாளையம் மற்றும் பி.என்., ரோடு, மின்வாரிய அலுவலகங்களில் தானியங்கி மின்கட்டண வசூல் மையம் திறப்பு விழா நேற்று நடந்தது; கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேலு தலைமை வகித்து, மையங்களை திறந்து வைத்தார். திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா முன்னிலை வகித்தார்.
மண்டல தலைமை பொறியாளர் தங்கவேல் பேசியதாவது:
மின்வாரிய அலுவலகங்களில், மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து மின்கட்டணம் செலுத்த சிரமப்பட்டனர். தானியங்கி மின்கட்டண மையங்கள் திறக்கப்படுவதால், மக்கள் சிரமம் குறைகிறது; கூட்ட நெரிசல் தவிர்க்கப்படுகிறது; தாமதமின்றி கட்டணத்தை எளிதாக செலுத்த முடிகிறது.
திருப்பூரில் மூன்று மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, கருவம்பாளையம், அனுப்பர்
பாளையம், பூண்டி, செட்டிபாளையம், பாண்டியன் நகர், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பிற பகுதிகளிலும், விரைவில் தானியங்கி மின்கட்டண வசூல் மையங்கள் ஏற்படுத்தப்படும்.
கடந்த நவ., 6ம் தேதியன்று ஏற்பட்ட மழை வெள்ளத்தில், 1,200 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டன; வெள்ளத்தில் பல கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்தன. அவை அனைத்தும் சரி செய்ய
பட்டுள்ளன, என்றார்.

Tuesday, 27 December 2011

13 வயது சிறுமியை கடத்தி திருமணம்

 

 திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.நகரைச் சர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் பாக்யா (வயது 13). தெருச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 17-ந்தேதி வேலைக்கு சென்ற பாக்யா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தனர். ஆனால் எங்கும் காணவில்லை.
பின்னர் பனியன் கம்பெனியில் விசாரித்ததில் அதே கம்பெனியில் பணியாற்றிய விஜய் என்ற வாலிபர் பாக்யாவை கடத்தி சென்று சிவன்மலை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
மேலும் விஜய்தான் பாக்யாவை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பாக்யாவின் தாய் அலமேலு திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விஜய், அவரது நண்பர் வெங்கடேஷ், விஜயின் அக்காள் உள்பட 4 பேர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடிவருகின்றனர்.

Monday, 26 December 2011

நதிக்கரையில் பொங்கல் விழா

திருப்பூரில் நொய்யல் ஆற்றை பாதுகாக்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தாண்டும் நதிக்கரையில் பொங்கல் விழா கொண்டாட, வளம் அமைப்பின் நொய்யல் சீரமைப்பு கமிட்டி திட்டமிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு, திருப்பூருக்குள் நுழைந்ததும் ஆக்கிரமிப்புகளால் குறுகியும், கழிவுகளாலும் மாசுபடுத்தப்படுகிறது. நகரின் மத்தியில் ஓடி பெருமை சேர்க்கும் நொய்யலை காக்கும் வகையில் வளம் அமைப்பு சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் நொய்யல் சீரமைப்பு குழு சார்பில், ஆற்றின் கரைகளின் இருபுறமும் ரோடு அமைக்கப்பட்டது.
புதிதாக பாலம், நடைபாதை, கான்கிரீட் கரைகள் ஏற்படுத்தப்பட்டன. இயற்கை வளமான நதியை காக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்தாண்டு நொய்யல் நதிக்கரையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அதேபோல், இந்தாண்டும் பொங்கல் விழா நடத்த, வளம் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, இருபுறமும் உள்ள ஆற்றின் கரைகள் தூய்மைப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. ஈஸ்வரன் கோவில் பாலம் முதல் அணைக்காடு வரை இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வளம் அமைப்பு சார்பில் ஆற்றின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நொய்யல் சீரமைப்பு கமிட்டி தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:
வளம் அமைப்பு சார்பில் நொய்யல் நதி சீரமைப்பு பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் மீண்டும், மீண்டும் ஆறு மாசுபட்டு வருகிறது. தற்போது, ரோட்டின் இருபுறமும் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
மாநகராட்சி சார்பில், கழிவு நீர் நேரடியாக கலக்கப்படுவதால், ஆற்று நீர் முழுமையாக மாசடைந்து வருகிறது. ஆற்றில் கழிவு நீர் கலக்காத வகையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். போதிய விழிப்புணர்வு இல்லாமல், பொதுமக்களும் கழிவுகளையும், மாமிச, மனித கழிவுகளையும் தொடர்ந்து கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். ஆறு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தாண்டும் பொங்கல் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

உயிர் பலி வாங்கும் அவிநாசி N H ரோடு

                           


    சேலத்தில் துவங்கி கோழிக்கோடு வரையிலான என்.எச்., 47 ரோடு, அவிநாசி வழியாக செல்கிறது. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், இந்த ரோட்டை கடக்கின்றன. ஆனால், அதற்கேற்ற தரத்தில் ரோடு வசதியில்லை. குண்டும், குழியுமாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டில் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும், தூசி மண்டலமாக இருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், சுவாசக்கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்த்து, இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
"விநாசம்' என்றால் அழிவு என பொருள்; அதில், "அ' சேர்த்து "அவிநாசம்' எனும்போது, அழிவில்லாதது என்று பொருள்படும். காலப்போக்கில், "அவிநாசி' ஆகி விட்டது. இது இன்று நேற்றல்ல... ஆயிரம் ஆண்டுக்குமுன் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பற்றி எழுதப்பட்டுள்ள தேவாரப் பாட்டுகளில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. எனவே, என்றுமே அழிவில்லாத ஊர் என்று கோவில் தல புராணத்தில் வர்ணிக்கப்பட்ட அவிநாசிக்கு, தேசிய நெடுஞ்சாலையால் ஏற்பட்டுள்ள பல பிரச்னைகள், அவிநாசி மக்களை அழி வுக்கு கொண்டு செல்லுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை எண் 47, சேலத்தில் துவங்கி, கேரள மாநிலம் கோழிக்கோடு வரை செல்கிறது. தினமும் லாரி, கனரக லாரி, டிரெய்லர், கண்டெய்னர், பஸ், கார்கள் என தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் கடக்கின்றன. அவிநாசி வழியே செல்லும் இச்சாலையின் தரம் குறைந்து கொண்டே செல்கிறது. எங்கு பார்த்தாலும் பெரிய, சிறிய குழிகள், பள்ளங்கள். ரோடு என்பதற்கான இலக்கணத்தை இழந்து தவிக்கிறது. அவ்வப்போது போடப்படும், தரமற்ற "பேட்ஜ்'களால் இன்னும் மோசமான நிலைக்கு ரோடு வந்து விட்டது.
நான்கு/ஆறு வழிச்சாலை பணிகள் துவங்கிய பின், நிலைமை இன்னும் படுமோசமாகி விட்டது. வாரச்சந்தை முதல் ஆட்டையாம்பாளையம் வரை, நிலைமை படுமோசமாகி விட்டது. குழிகளில், அதிலுள்ள மண்ணால் ஏற்படும் புழுதி, தாறுமாறான போக்குவரத்து, போக்குவரத்து விதிமுறையை மீறும் வாகன ஓட்டிகள், சாலையை கடக்கும் பாதசாரிகள் என்று ஒட்டுமொத்த குளறுபடிகளால், பரிதாப நிலையில் என்.எச்., ரோடு உள்ளது.
புழுதிப்படலத்தால் ஆபத்து: புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் சீனிவாசபுரம் வரை வாகனங்களின் தாறுமாறான "பயணத்தால்' ஏற்படும் புழுதி மண்டலம், அவிநாசி மக்களை பல நோய்களுக்கு ஆட்படுத்தி வருகிறது. ரோட்டின் குழிகளில் கொட்டப்படும் மண் மற்றும் ரோட்டோரத்தில் இருக்கும் மண் ஆகியன நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது காற்றில் பறக்கிறது. அவற்றுக்கு பின்புறம் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், சாலை வழியே நடக்கும் பொதுமக்கள் மூக்கை பொத்திக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
மக்களை கஷ்டப்படுத்தும் இப் புழுதி, கடையிலுள்ள உணவு பண்டங்கள் மீதும் விழுகிறது. ஏற் கனவே, காற்றில் பறக்கும் துகள்களை சுவாசிக்கும் மக்கள், புழுதி படிந்த உணவு பொருட்களை சாப்பிடும்போது ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல நோய்கள் தாக்குகின்றன. மேலும், போக்குவரத்தை சீரமைக்க போலீசார் வைத்துள்ள "டிவைடர்களுக்கு' கீழ் தேங் கும் மண் துகள்களும் புழுதியாக பறந்து மக்களை பாடாய்ப்படுத்துகின்றன.
புழுதிக்கான காரணம்: பஸ் மற்றும் சில வாகனங்களின் அவசரத்தால், முன்னால் செல்லும் வாகனங்களை இடதுபுறம் (வலதுபுறம் டிவை டர்கள் உள்ளதால்) படுவேகமாக முந்திச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, ரோட்டிலிருந்து விலகி, மண் ரோட்டில் இறங்கிச் செல்லும்போது, புழுதி மண்டலம் ஏற்படுகிறது. தற்போது பல இடங்களில் தார் ரோட்டுக்கு பதிலாக மண் ரோடுதான் உள்ளது என்பதும் புழுதிக்கு முக்கிய காரணம்.
அதிகரிக்கும் விபத்துகள்: ரோட்டின் அவலநிலையால், கடந்த மூன்று ஆண்டில் 15 பேர் வரை பலியாகி உள்ளனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் குழிகளில் விழுந்து பலத்த காயங்களுக்கு ஆட்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் கண்ணை மூடச்செய்யும் அளவுக்கு அதிகளவில் ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் வாகனங்களால், ரோட்டின் குழிகளில் இரு கர வாகனத்தை செலுத்தும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
மழை பெய்தால், புழுதி மறைந்து, சேறாகி, நடக்கவே முடியாது; வெயிலடித்தால் மண் நன்றாக காய்ந்து, வாகனங்களில் அறைபட்டு துகள்களாக மாறி புழுதியாகி விடுகிறது. பருவ நிலை எப்படி இருந்தாலும், அவிநாசி மக்கள் அனுதினமும் அல்லல்படுவது தொடர்கதையாகி விட்டது.
மீண்டும் உயிர் பலி: என்.எச்., 47ல் புதிதாக தார் ரோடு அமைக்க, அனைத்து கட்சியினர், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த வாரம் ரோட்டை ஆய்வு செய்த கலெக்டர் மதிவாணன், புதிதாக ரோடு போடுமாறு உத்தரவிட்டார். அடுத்த நாளே சில இடங்களில், சில அடி தூரம் மட்டும் ரோடு அமைக்கப்பட்டது. இருப்பினும், புழுதி குறைந்தபாடில்லை.
குறிப்பாக, ரோட்டுக்கு இருபுறம் உள்ள மண் மற்றும் ரோட்டுக்கு நடுவே உள்ள டிவைடர்களுக்கு இடையிலுள்ள கற்கள் மூலம் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. 10 நாட்களுக்கு முன் சைக்கிளில் வந்த அய்யாக்குட்டி, ரோட்டு குழியில் செலுத்தி கீழே விழுந்தார். அப்போது, லாரி ஏறியதில், அதே இடத்தில் இறந்தார். அவரின் மரணத்துக்கு ரோட்டில் இருந்த குழி மற்றும் கற்களுமே காரணம்.
அந்த இடத்தில் இருந்து 10 அடி தள்ளி, நேற்று காலை ஒரு பெண் பலியானார். கோவை - கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி உஷா (45), தனது மகன் விஸ்வகுமாருடன் பைக்கில், பூண்டி சென்று கொண்டிருந்தார்.
சப்-ரிஜிஸ்டர் அலுவலகம் எதிரே சென்றபோது, ரோட்டின் ஓரத்தில் இருந்து தேங்கியிருந்த மண் காரணாக பைக் சாய்ந்தது.
ரோட்டில் விழுந்த உஷாவின் தலை மீது, பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறி, அதே இடத்தில் தலை நசுங்கி இறந்தார். கண்ணெதிரே தாய் இறந்ததை தாங்க முடியாமல், அவரது மகன் விஸ்வகுமார் கதறி அழுதார். ரோடு சீராக இல்லாத காரணத்தால், ஒரே நொடியில் ஒரு பெண் பலியானார். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் ஆட்டையாம்பாளையம் வரையிலான பகுதிகளில் ஆறு பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தீர்வே கிடையாதா? கண்ணிமைக்கும் நேரத்தில், ஒரு பெண் பலியானதில், அவரது குடும்பம் நிலைகுலைந்துள்ளது. மனித உயிர்கள் இவ்வளவு மலிவாக அவிநாசியிலுள்ள என்.எச்., ரோட்டில் பலியாவதை அறிந்த பொதுமக்கள், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். பொதுமக்களும், கட்சியினரும் ரோட்டை சீரமைக்க குரல் கொடுத்தாலும், நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டாலும்கூட, அவர்களின் இறப்புக்கான காரணங்களில் என்.எச்., ரோட்டின் பங்கு மிக முக்கியமாக உள்ளது, அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் நன்றாகவே தெரியும். இருப்பினும், அதை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க யாரும் முன்வராமல் மவுனம் சாதிக்கின்றனர். இனியும், மவுனம் சாதிக்காமல், கைகாட்டிப்புதூர் முதல் ஆட்டையாம்பாளையம் வரை தரமாக ரோடு அமைத்தால் மட்டுமே விபத்துகளும் குறையும்; போக்குவரத்தும் சீராகும்.
இன்று ஆர்ப்பாட்டம்: இப்பிரச் னைகளை சுட்டிக்காட்டி, அவிநாசி வட்டார தி.மு.க.,- மா.கம்யூ., - இந்திய கம்யூ.,- தே.மு.தி.க., மற்றும் ம.தி.மு.க., சார்பில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பெரிய தேர் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. படுமோசமாக உள்ள என்.எச்., ரோட்டை சீரமைத்து, விபத்துகளில் உயிர்கள் பலியாவதை தடுக்க வலியுறுத்தி, மேற்கண்ட கட்சி நிர்வாகிகள் பேசுகின்றனர்.

Saturday, 24 December 2011

2012 இல் திருப்பூர் திருப்பம் பெறுமா?

                                              

கடந்த ஓராண்டாக நெருப்பாற்றில் நீந்தி வரும் திருப்பூர் பனியன் தொழில் துறை, வரும் புத்தாண்டில் இருந்து பழைய நிலைக்கு திரும்புமா என, உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் எதிர்பார்க்கின்றனர். ஏற்றுமதி வர்த்தகம் ஆண்டுக்கு 12 ஆயிரத்து 500 கோடி, உள்நாட்டு வர்த்தகம் நான்கு ஆயிரம் கோடி என திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் நடந்து வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு 15 சதவீத வளர்ச்சி பெற்று வந்த பனியன் தொழில், அடுத்தடுத்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆட்பட்டது. கடந்த 2007ல், அமெரிக்க டாலர் விலை வீழ்ச்சியால் ஏற்று மதி வர்த்தகம் சிதறும் அபாயம் ஏற்பட்டது. பழைய விலைக்கு ஒப்பந்தம் செய்த ஏற்றுமதியாளர்கள், டாலர் மதிப்பு குறைந்த தால் நஷ்டத்தை சந்தித்தனர். அடுத்ததாக, 2008 முதல் மின்வெட்டு பிரச்னை பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இதுவரை, அப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. சர்வதேச அளவில் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்ததால், இந்திய பருத்தி வியாபாரிகள், இங்குள்ள பருத்தியை மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கினர்.வெளிநாட்டு நிறுவனங்களிடம் கூடுதல் விலையை பெற்று கொள்ளை லாபம் ஈட்டின. பருத்தி பஞ்சுக்கு கிராக்கி ஏற்பட்டதால், நூல் விலை வரலாறு காணாத அள வுக்கு உயர்ந்தது. ஆண்டு துவக்கத்தில், 130 ரூபாய்க்கு விற்ற காட்டன் ஒசைரி நூல், 230 ரூபாய் வரை விலை உயர்ந்தது. தொழில் வரலாற்றில் இல்லாத அள வுக்கு நூல் விலை உயர்ந்ததால், ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் ஸ்தம்பித்தது. பருத்தி ஏற்றுமதி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டும், உள்நாட்டு நிலைமை சீராகவில்லை. இதனால், கடந்த 2009-10ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்திருந்த ஏற்றுமதியாளர்கள், ஆர்டரை முடித்து அனுப்புவதற்குள் விழிபிதுங்கி நின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நீடித்து நிலைத்து வந்த பிரச்னைகள் படிப்படியாக குறையும் அறிகுறி தென்பட்டது. பருத்தி விலை இறக்கத்தால், நூலிழையும் சீரான விலைக்கு கிடைத்தது. யாவரும் எதிர்பாராத நேரத்தில், 2011ம் ஆண்டு துவக்கத்தில், ஐகோர்ட் நடவடிக்கைக்கு உள்ளாகி, சாய ஆலைகள் மூடப்பட்டன. திருப்பூரில் உள்ள அனைத்து ஆலைகளும் மூடப்பட்டதால், பனியன் உற்பத்தி முடங்கத் துவங்கியது.சாயத்தொழில் பாதிப்பு நீண்ட நாட்களுக்கு இருக்காது என்று நம்பியிருந்த ஏற்று மதியாளர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகியது. ஆர்டர்களை குறித்த நேரத்தில் அனுப்பி னால் மட்டுமே, பையர்களிடம் நற்பெயர் கிடைக்கும் என்பதால், ஆர்டர்களை முடிக்க, வெளிமாநிலங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் சென்று பனியன் துணிகளுக்கு சாயமிடப்பட்டது. ஆறு மாதம் எவ்வித தீர்வும் கிடைக்காமல் இருந்த சாயத்தொழில் பிரச்னைக்கு, தமிழக அரசு தகுந்த தீர்வு கண்டது. சோதனை முறை ஓட்டத்துக்காக இதுவரை 240 சாய ஆலைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆலைகளை இயக்குவதற்கான ஆயத்த பணி கள் புயல் வேகத்தில் நடந்து வருகின்றன. திருப்பூர் பனியன் தொழில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, சாய ஆலைகள் ஓராண்டு மூடப்பட்டிருந்தது பனியன் தொழில் வேகத்தை மட்டுப்படுத்தி விட்டது. இருப்பினும், தமிழக அரசின் அணுகு முறையால், மானிய உதவி, வட்டியில்லா கடனுதவிகளை பெற்று சாய ஆலைகள் புத்துயிர் பெற்றுள்ளன. திருப்பூர் மீது நம்பிக்கை இழந்திருந்த பையர்களுக்கும் நம்பிக்கை பிறந்துள்ளது. ஆயத்த பணிகள் முடிந்து, வரும் ஜனவரியில் இருந்து, அனுமதி பெற்ற ஆலைகள் இயங்கும்போது, பனியன் தொழிலில் ஏற்பட்டு வந்த நெருக்கடி குறையும் என உற்பத்தியாளர்கள் புத்தாண்டை எதிர்நோக்கி உள்ளனர்.