Thursday, 23 February 2012

ரூ.10 கோடி நகைக் கொள்ளை; விசாரணையில் புது தகவல்!

                                
திருப்பூர், ஆலுக்காஸ் ஜூவல்லரியில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவர்களை பிடிக்க, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கொள்ளைக்கு பயன்படுத்திய காஸ் சிலிண்டர், துறை
முகங்களில் பயன்படுத்தப்படுபவை என தெரியவந்துள்ளது.
திருப்பூர், குமரன் ரோட்டில் உள்ள ஆலுக்காஸ் ஜூவல்லரியின் "வென்டிலேட்டர்' கம்பிகளை காஸ் வெல்டிங் மூலம் வெட்டி, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 10 கோடி ரூபாய் மதிப்பிலான 36 கிலோ தங்கம் மற்றும் 2 கிலோ வைரம் பதித்த நகைகளை நேற்று முன் தினம் கொள்ளையடித்துச் சென்றனர். கைரேகை நிபுணர்கள், 23 வகையான ரேகைகளை சேகரித்துள்ளனர்; சில தடயங்களும் கிடைத்துள்ளன. கொள்ளை தொடர்பாக, நகை கடை ஊழியர்கள், அருகிலுள்ள கட்டடத்தில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் , "ஏசி' மெஷின் பழுதுபார்க்க வந்த தொழிலாளர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
காஸ் சிலிண்டர் மர்மம்: கொள்ளையர் பயன்படுத்திய சிறிய ரக காஸ் சிலிண்டர், பொதுவான பயன்பாட்டில் இல்லாதது. மருத்துவமனைகளில் நீளமான சிலிண்டர்களே பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டடி உயரமுள்ள சிலிண்டர்கள், துறைமுகங்களில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை சிலிண்டர்களே நகைக் கொள்ளையின் போது, கம்பிகளை வெட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு ஆக்சிஜன் நிரப்பும் ஒரு நிறுவனம், கோவையில் உள்ளதால் அங்கும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காஸ் கட்டிங் முறையில் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய மாஜி குற்றவாளிகள் குறித்து தகவல் திரட்டப்
படுகிறது.
ஏ.சி., மெக்கானிக்குகள்: ஆலுக்காஸ் நகைக்கடையில் சில நாட்களுக்கு முன் "ஏசி' இயந்திரங்கள் சர்வீஸ் செய்யப்பட்டுள்ளன. அந்த ஊழியர்கள் கடையை போட்டோ எடுத்துள்ளனர். அங்கிருந்தவர்கள் எதற்கு என கேட்ட போது, "எங்களது கம்பெனிக்கு காண்பிக்க வேண்டும்' என கூறியுள்ளனர். இவர்களையும் போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.
வட மாநிலத்தவர்கள் : கொள்ளை நடந்த ஆலுக்காஸ் ஜூவல்லரிக்கு அருகில் கட்டடம் கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுபோன்ற சிலிண்டர் குறித்து கொங்கு நகரிலுள்ள ஒரு காஸ் கடையில் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர், சில நாட்களுக்கு முன் விசாரித்துள்ளார்.
இதனால், திருப்பூரிலுள்ள வட மாநில தொழிலாளர்கள் மீது போலீசார் கவனத்தை திருப்பியுள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொழிலாளர்கள் குறித்து தகவல் திரட்டி வருவதோடு, சந்தேகப்படும் நபர்களை தனியாக அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். சிறப்பு காவல் படை போலீசார், உள்ளூர் போலீசார் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.பி., பாலகிருஷ்ணன் கூறுகையில், ""நகைக் கொள்ளையில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம். சம்பவ இடத்தில் கிடைத்த கை ரேகைகள், பழைய குற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒப்பிடும் பணி நடக்கிறது. காஸ் சிலிண்டர், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதால் வல்லுனர்களிடம் கேட்கப்பட்டது.
இந்த வகை சிலிண்டர், துறைமுகங்களில் பயன்படுத்தப்படுபவை என்றும், தேய்மானம் காரணமாக "காயலான் கடைக்கு' தள்ளப்பட்டவை, என தெரிவித்தனர். முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதால் கொள்ளையர்கள் விரைவில் சிக்குவர்,'' என்றார்.

No comments:

Post a Comment