Monday, 27 February 2012

திருப்பூர் நகைக்கடையில் கொள்ளை: செல்போன் டவர் மூலம் துப்பு துலக்கும் பணி தீவிரம்



திருப்பூர் ஆலுக்காஸ் ஜுவல்லரியில், கடந்த 20-ந் தேதி நள்ளிரவு வென்டிலேட்டரை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கடையில் இருந்த ரூ.12 கோடி மதிப்பிலான 38 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் எஸ்.பி.பாலகிருஷ்ணன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் வடமாநிலத்தினர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதன்படி வடமாநிலத்தினர் இருவரின் வரைபடம் கம்ப்யூட்டரில் தயாரிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

திருப்பூரில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தினரின் கைரேகைகளை பதிவு செய்துள்ள போலீசார் அவர்களின் கைரேகைகளை ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் தனிப்படையினர் ஒடிசா, கேரளா உள்ளிட்ட வடமாநிலங்களில் விசாரித்து வருகின்றனர்.

கோவை சரக டி.ஐ.ஜி. ஜெயராம், எஸ்.பி.க்கள் பாலகிருஷ்ணன் (திருப்பூர்), பன்னீர்செல்வம் (ஈரோடு), நிஜாமுதீன் (நீலகிரி) ஆகியோருடன் நகைக்கடை கொள்ளை சம்பவம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.

கம்ப்யூட்டர் மூலம் வரையப்பட்டுள்ள இரு கொள்ளையர்களின் வரைபடத்தை போலீசார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளனர். நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் திருட்டு நகைகளை சந்தேகிக்கும்படி யாராவது கொண்டு வந்து விற்றால் அதனை உடனடியாக போலீசாருக்கும் தெரிவிக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

நகையை உருக்கி ஆபரணங்கள் செய்வோரிடமும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நடந்த நகைக்கடையின் பின்புறம் 6 செல்போன் டவர்கள் உள்ளன. கொள்ளை நடந்த அன்று இந்த டவர்களில் இருந்து எங்கெங்கு தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. யார், யார்? பேசியுள்ளனர். வடமாநிலங்களுக்கு பேசப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து விவரம் சேகரித்துள்ளனர்.

கொள்ளை நடந்த அதே நாளில் மற்ற கடைகளுக்கும் யாராவது மர்ம மனிதர்கள் வந்துள்ளார்களா? என்பதை அறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன் முதல்கட்ட நடவடிக்கையாக மற்ற கடைகளின் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

நகைக்கடை கொள்ளை தொடர்பாக முக்கிய தடயம் சிக்கியுள்ளதாகவும், கொள்ளையர்கள் விரைவில் சிக்குவார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment