Tuesday, 28 February 2012

உடுமலை வனத்தில் 2வது நாளாக தீ

                                   
 உடுமலை வனச்சரகத்தில் நேற்று முன்தினம் பகலில் காட்டுத்தீ பரவியது. 2வது நாளாக நேற்றும் தொடர்ந்து எரிந்த  தீயை அணைக்க வனத்துறையினர் போராடினர். இதுவரை 150 ஏக்கரில் மரம், செடிகள் கருகிவிட்டன.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 450 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி உள்ளது. ஒன்பதாறு செக்போஸ்டில் இருந்து செல்லும் மூணாறு ரோட்டின் வலது புறமுள்ள உடுமலை வனச்சரகத்தில் நேற்று முன்தினம் காலையில்  திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  ஏழுமலையான் கோயில் சுற்று, பாம்பன் சோலை, அரசியம்மாள் மலை பகுதிகளில் பிடித்த தீயால்  மரம், செடிகள் எரிந்து நாசமாயின. வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள்,  தீயணைப்புபடையினர் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதே வனச்சரகத்தில் கட்டளை மாரியம்மன் கோயில் அருகே கோடந்தூர் சுற்று, மூங்கில் தொரை ஆகிய இடங்களிலும் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீப்பிடித்த பகுதிக்கு எதிரே சற்றுதொலைவில் 2 அடி அகலத்தில் தீ தடுப்பு கோடு அமைத்து (குழிவெட்டி), எதிர்புறத்தில் தீவைத்தனர். இதனால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. விடிய விடிய தீ எரிந்தது. தீயால் பல நூறு மீட்டர் உயரம் எழுந்த புகையை உடுமலை நகர் பகுதியில் இருந்து பார்க்க முடிந்தது. மக்கள் அச்சமடைந்தனர். நேற்று 2வது நாளாக தீ தொடர்ந்து எரிந்தது.  தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர்.
இந்த வனத்தீயால் 150 ஏக்கரில் மரம், செடிகள், சருகுகள் எரிந்து விட்டன. கோடை வெயிலின் தாக்கத்தால் வனத்தில் செடி, கொடிகள் கருகியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment