நாடு முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தது. 7 வங்கி யூனியன்கள், 11 மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய தொழிற் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. இதனால் வங்கி பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
பி.எஸ்.என்.எல்., தபால் ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தில் பங்கேற்றதால் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்திலும் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. கோவையில் இன்று பொது வேலை நிறுத்தத்தை யொட்டி பெரும்பாலான தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டிருந்தது. கால் டாக்சிகள் இயங்கவில்லை.
கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை. அனைத்து சிறிய பெரிய மில்கள், தொழிற் கூடங்களும் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றன. சூலூரில் 30 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. தறி பட்டறைகளும் இயங்க வில்லை. வங்கிகளும் மூடப்பட்டிருந்தது.
கோவையில் அரசு மற்றும் தனியார்பஸ்கள் வழக்கம் போல் இயங்கியது. அ.தி.மு.க. தொழிற் சங்க ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பொது வேலை நிறுத்தத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு இன்று பஸ்கள் ஓட வில்லை. ஆனால் டவுன் பஸ்கள் வழக்கம் போல் இயங்கியது. ஆட்டோக்கள், மினி ஆட்டோக்கள் ஓடியது.வங்கிகள் அடைக்கப்பட்டு இருந்தது.
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா உத்தரவின் பேரில் பொள்ளாச்சி டி.எஸ்.பி. பாலாஜி தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி போலீசார் 68 பேரும், கோவையில் இருந்து ஆயுதப்படை போலீசார் 50 பேரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்திலும் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்திற்கு சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி., பி.எம்.எஸ்.எச்.எம்.எஸ். ஆகிய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. வேலை நிறுத்தத்தை யொட்டி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஒரு சில கடைகள் மட்டும் திறந்து இருந்தது.பனியன் கம்பெனிகளும் பெருமளவில் இயங்கவில்லை. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது.
மத்திய அரசு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., தபால் நிறுவனங்கள், வங்கிகள் திறந்து இருந்தன.திருப்பூர் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். மற்றும் தபால் ஊழியர்களும், 2500 வங்கி ஊழியர்களும் உள்ளனர். அவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஊழியர்கள் வேலைக்கு வராததால் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. இதனால் தொழில் நிறுவனத்தினர் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் செக் மற்றும் டி.டி. எடுக்க முடியவில்லை. ஆனால் வங்கிகளின் ஏ.டி.எம். சேவை வழக்கம் போல் இயங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று பொது வேலை நிறுத்தத்தால் எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம் போல் ஆட்டோக்கள் ஓடியது. பஸ் போக்குவரத்தும் இயங்கியது. வங்கிகள் மட்டும் மூடிக் கிடந்தது. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியதால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
No comments:
Post a Comment