திருப்பூர் ஆலுக்காஸ் ஜூவல்லரியில், கடந்த மாதம் 20ம் தேதி நள்ளிரவில் பின்புறம் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கடையில் இருந்த 38 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென் றனர். இதில் தொடர்புடைய வடமாநில கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போது கிடைத்த செல்போன் சிக்னல் ஆதாரத்தைக் கொண்டும் கொள்ளையர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து திருப்பூர் டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையில் 5 தனிப்படையினர் ஜார்கண்டில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் ஒடிசா, ஆந்திரா உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நகை கடைகளை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளை கும்பலுக்கு தலைவனாக அஜ்மல் என்பவன் செயல்பட்டது தெரியவந்தது.
இந்த தகவலின் அடிப்படையில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலத்தில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதன்படி கொள்ளையர்களில் ஒருவனான ஜார்க்கண்ட் மாநிலம், சாகிபக்காஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த அப்சல் சாயிக் மகன் ஜியாஉல் சாயிக் (25) என்பவனை இருதினங்களுக்கு முன்னர் ஜார்கண்டில் வைத்து போலீசார் பிடித்தனர். இவன் அளித்த தகவலின் பேரில் மேலும் இருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இவர்களிடம் இருந்து நகை ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகை முழுவதும் கும்பல் தலைவனாக இயங்கி அஜ்மல் வசம் உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அஜ்மல் உட்பட மற்ற கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள போதும், நகைகள் மீட்கப்படாத நிலையில், பிடிபட்ட 3 கொள்ளையர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்களை திருப்பூர் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. இன்னும் ஓரிரு தினங்கள் ஜார்கண்டில் வைத்து 3 பேரிடமும் விசாரணை நடக்கும் என்றும், அதன் பின்னர் அம்மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னரே திருப்பூர் அழைத்து வருவார்கள் என்றும் தெரிகிறது. கொள்ளை சம்பவத்தில் எந்த துப்பும் கிடைக்காத சூழலில் எஸ்.பி. அறிவுறுத்தலின் அடிப்படையில், நகை கடை பகுதியில் உள்ள செல்போன் சிக்னல்களில் கடந்த 17ம் தேதி துவங்கி 20ம் தேதி வரையிலான செல்போன் எண்களை போலீசார் சேகரித்து விசாரித்தனர். சுமார் 2 லட்சம் தொலைபேசி எண்களை கொண்டு போலீசார் விசாரித்தனர். இதில் கொள்ளை சம்பவம் நடந்த 20ம் தேதி இரவு சில வடமாநில எண்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அந்த எண்ணை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியதில் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அங்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கொள்ளையர்களில் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட கொள்ளையர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் 9 பேர் வரை இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிடிபட்ட வர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அளிக்கும் தகவல்கள் பெரும்பாலும் தவறாக இருப்பதால் போலீசார் அதிருப்தியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment