Tuesday, 6 March 2012

நகைக்கடையில் திருடியவர்கள் கைது?

திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையில் ரூ. 12 கோடி மதிப்புள்ள நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநிலக் கும்பலைச் சேர்ந்த 3 பேர் மேற்குவங்க மாநில எல்லையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.  திருப்பூர், குமரன் சாலையில் உள்ள ஆலுக்காஸ் நகைக்கடையில் அண்மையில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 36 கிலோ தங்க நகைகள், 340 காரட் வைரங்கள் பொருத்தப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் என ரூ. 12 கோடி மதிப்புடைய 38 கிலோ (4,750 பவுன்) தங்க நகைகளும், 340 காரட் வைர நகைகளையும் திருடிச் சென்றனர்.  இத் துணிகரத் திருட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க, டிஎஸ்பி ராஜாராம் தலைமையில் முதலில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இத்திருட்டில் பெங்காலி கலந்த ஹிந்தி பேசும் வட மாநில கும்பல் ஈடுபட்டிருப்பது உறுதியானதை அடுத்து, 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.  இதன் அடிப்படையில், திருப்பூரில் தங்கியிருந்த பெங்காலி கலந்த ஹிந்தி பேசுபவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், தனிப்படை போலீஸôர் மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். விசாரணையின்போது கிடைத்த செல்ஃபோன் ஆதாரத்தைக் கொண்டு, கொள்ளையர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.  இதையடுத்து, டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான தனிப்படை வெள்ளிக்கிழமை ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு விரைந்தது. தொடர்ந்து, அனுப்பர்பாளையம், காங்கயம், பெருமாநல்லூர், திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படைகளும் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களின் எல்லைப் பகுதியில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.  இதில், திருப்பூர் நகைக்கடை திருட்டுக் கும்பலைச் சேர்ந்த 3 பேரை மேற்கு வங்க மாநிலம், பராக்கா என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸôர் சுற்றிவளைத்துப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.  கைதான 3 பேரில் ஒருவர் ஜார்க்கண்ட் மாநிலம், சாகிபக்காஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த அப்சல் சாயிக் மகன் ஜியாஉல் சாயிக் (25) என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், இக்கும்பலின் தலைவன் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜ்மல் என்பதும், திருப்பூர் நகைக்கடைத் திருட்டில் 6 பேர் ஈடுபட்டதும் தெரியவந்தது; கோவை, திருப்பூரில் உள்ள நகைக்கடைகளில் வேலை செய்து கொண்டே ஆலுக்காஸ் நகைக்கடையில் திருட்டு நடத்த சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.  இதையடுத்து, அஜ்மல் மற்றும் இருவரைப் பிடிக்க போலீஸôர் அம்மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் இக்கைது குறித்த தகவல்களை காவல்துறை உயரதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

No comments:

Post a Comment