இந்தியா வல்லரசு ஆவதை தடுக்கவே, சிலர் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர் என, திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு குற்றம்சாட்டியது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக 20ம் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டம் குறித்த கூட்டம், திருப்பூர் தொழில் பாதுகாப்பு அலுவலகத்தில் நடந்தது. நிர்வாகக் குழு தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். உயர் மட்டக்குழு தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். திருப்பூரில் தினமும் ஆறு மணி நேரத்துக்கு மேல் மின்தடை ஏற்படுவதால் பனியன் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் முடங்கிப் போயுள்ளன. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நிறுவனங்களில், 50 சதவீதம் அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளது. மின் தடை நீங்க, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்க வேண்டும். அணுமின் உற்பத்தியை விரைந்து துவங்க வலியுறுத்தி, வரும் 20ம் தேதி உண்ணாவிரத போராட்டம் திருப்பூரில் நடக்கிறது.
போராட்டத்தில் பங்கேற்க, அனைத்து தொழில்துறையினரும் தங்களது நிறுவனங்களுக்கு ஒருநாள் விடுமுறை அளித்து,போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். உலகில் மொத்தம் 433 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றிலிருந்து, மூன்று லட்சத்து 66 ஆயிரத்து 555 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், அமெரிக்காவில் 104 அணு உலைகள் உள்ளன; அவற்றில் மட்டும் ஒரு லட்சத்து ஒரு ஆயிரத்து, 240 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள 58 அணு உலைகளில், 63 ஆயிரத்து 130 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஜப்பானில் உள்ள 50 அணு உலைகளில் இருந்து 44 ஆயிரத்து 215 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. ரஷ்யாவில் 32 அணு உலை மூலமாக, 22 ஆயிரத்து 693 மெகாவாட் மின்சாரமும், இந்தியாவில் 20 அணு உலை மூலமாக 4 ஆயிரத்து 391 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. வல்லரசு நாடுகள் மட்டுமே அதிகளவில் அணு உலைகளை கொண்டுள்ளன.
இந்தியாவில் தற்போது கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணு உலை அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளை காட்டிலும் மிக அதிநவீன தொழில்நுட்பத்தில் (வாட்டர் எனர்ஜி ரியாக்டர்- டபிள்யூ. டபிள்யூ.இ.ஆர்.,) ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிநவீனமானது; அதிக பாதுகாப்பு கொண்டது. இத்தொழில்நுட்பத்தில் இந்திய அணுஉலைகள் இயங்க துவங்கினால், அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக, அணு விஞ்ஞானத்தில் இந்தியா விளங்கும். இதை தடுப்பதற்காக சிலர் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இந்தியா வல்லரசு ஆவதை தடுக்க அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள் அணுமின் உற்பத்தியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில், நல்ல தரமான சர்வதேச தரத்துடன் கூடிய ரோடு வசதிகள், குடிநீர்வசதி, மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும். இந்தியாவிலேயே வளர்ந்த பகுதியாக கூடங்குளத்தை மாற்ற, மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும் என்று பாதுகாப்பு குழு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, விஜயகுமார், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment