கடந்த ஓராண்டாக நெருப்பாற்றில் நீந்தி வரும் திருப்பூர் பனியன் தொழில்
துறை, வரும் புத்தாண்டில் இருந்து பழைய நிலைக்கு திரும்புமா என,
உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் எதிர்பார்க்கின்றனர். ஏற்றுமதி
வர்த்தகம் ஆண்டுக்கு 12 ஆயிரத்து 500 கோடி, உள்நாட்டு வர்த்தகம் நான்கு
ஆயிரம் கோடி என திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் நடந்து வருகிறது. கடந்த
2007ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு 15 சதவீத வளர்ச்சி பெற்று வந்த பனியன் தொழில்,
அடுத்தடுத்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆட்பட்டது. கடந்த 2007ல், அமெரிக்க
டாலர் விலை வீழ்ச்சியால் ஏற்று மதி வர்த்தகம் சிதறும் அபாயம் ஏற்பட்டது.
பழைய விலைக்கு ஒப்பந்தம் செய்த ஏற்றுமதியாளர்கள், டாலர் மதிப்பு குறைந்த
தால் நஷ்டத்தை சந்தித்தனர். அடுத்ததாக, 2008 முதல் மின்வெட்டு பிரச்னை
பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இதுவரை, அப்பிரச்னைக்கு தீர்வு
கிடைக்கவில்லை. சர்வதேச அளவில் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்ததால்,
இந்திய பருத்தி வியாபாரிகள், இங்குள்ள பருத்தியை மொத்தமாக கொள்முதல்
செய்து பதுக்கினர்.வெளிநாட்டு நிறுவனங்களிடம் கூடுதல் விலையை பெற்று கொள்ளை
லாபம் ஈட்டின. பருத்தி பஞ்சுக்கு கிராக்கி ஏற்பட்டதால், நூல் விலை வரலாறு
காணாத அள வுக்கு உயர்ந்தது. ஆண்டு துவக்கத்தில், 130 ரூபாய்க்கு விற்ற
காட்டன் ஒசைரி நூல், 230 ரூபாய் வரை விலை உயர்ந்தது. தொழில் வரலாற்றில்
இல்லாத அள வுக்கு நூல் விலை உயர்ந்ததால், ஒட்டுமொத்த ஜவுளித்துறையும்
ஸ்தம்பித்தது. பருத்தி ஏற்றுமதி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு கட்டுப் பாடுகள்
விதிக்கப்பட்டும், உள்நாட்டு நிலைமை சீராகவில்லை. இதனால், கடந்த 2009-10ம்
ஆண்டில் ஒப்பந்தம் செய்திருந்த ஏற்றுமதியாளர்கள், ஆர்டரை முடித்து
அனுப்புவதற்குள் விழிபிதுங்கி நின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நீடித்து
நிலைத்து வந்த பிரச்னைகள் படிப்படியாக குறையும் அறிகுறி தென்பட்டது.
பருத்தி விலை இறக்கத்தால், நூலிழையும் சீரான விலைக்கு கிடைத்தது. யாவரும்
எதிர்பாராத நேரத்தில், 2011ம் ஆண்டு துவக்கத்தில், ஐகோர்ட் நடவடிக்கைக்கு
உள்ளாகி, சாய ஆலைகள் மூடப்பட்டன. திருப்பூரில் உள்ள அனைத்து ஆலைகளும்
மூடப்பட்டதால், பனியன் உற்பத்தி முடங்கத் துவங்கியது.சாயத்தொழில் பாதிப்பு
நீண்ட நாட்களுக்கு இருக்காது என்று நம்பியிருந்த ஏற்று மதியாளர்களின்
எதிர்பார்ப்பு பொய்யாகியது. ஆர்டர்களை குறித்த நேரத்தில் அனுப்பி னால்
மட்டுமே, பையர்களிடம் நற்பெயர் கிடைக்கும் என்பதால், ஆர்டர்களை முடிக்க,
வெளிமாநிலங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் சென்று பனியன் துணிகளுக்கு
சாயமிடப்பட்டது. ஆறு மாதம் எவ்வித தீர்வும் கிடைக்காமல் இருந்த சாயத்தொழில்
பிரச்னைக்கு, தமிழக அரசு தகுந்த தீர்வு கண்டது. சோதனை முறை ஓட்டத்துக்காக
இதுவரை 240 சாய ஆலைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆலைகளை இயக்குவதற்கான
ஆயத்த பணி கள் புயல் வேகத்தில் நடந்து வருகின்றன. திருப்பூர் பனியன் தொழில்
வரலாற்றில் இல்லாத அளவுக்கு, சாய ஆலைகள் ஓராண்டு மூடப்பட்டிருந்தது
பனியன் தொழில் வேகத்தை மட்டுப்படுத்தி விட்டது. இருப்பினும், தமிழக அரசின்
அணுகு முறையால், மானிய உதவி, வட்டியில்லா கடனுதவிகளை பெற்று சாய ஆலைகள்
புத்துயிர் பெற்றுள்ளன. திருப்பூர் மீது நம்பிக்கை இழந்திருந்த
பையர்களுக்கும் நம்பிக்கை பிறந்துள்ளது. ஆயத்த பணிகள் முடிந்து, வரும்
ஜனவரியில் இருந்து, அனுமதி பெற்ற ஆலைகள் இயங்கும்போது, பனியன் தொழிலில்
ஏற்பட்டு வந்த நெருக்கடி குறையும் என உற்பத்தியாளர்கள் புத்தாண்டை
எதிர்நோக்கி உள்ளனர்.
No comments:
Post a Comment