அபரிமிதமான வாகன போக்குவரத்து, மக்கள் நெரிசல், தொழிற்சாலைகள் கக்கும் புகை காரணமாக சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, "மக்கள் வாழத்தகுதியான நகரம்' என்ற அந்தஸ்தை திருப்பூர் இழந்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில் நகரமான திருப்பூரில், குறுகிய ரோடுகளில் தினமும் 2.5 லட்சம் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், 1.5 லட்சம் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. விதிமுறைகளை பின்பற்றாமல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் சில தொழிற்சாலைகள் இயங்குகின்றன. சில பகுதிகளில் போர்வெல் அமைத்து நேரடியாக நிலத்துக்குள் சாயக்கழிவுகளும், மனிதக்கழிவுகளும் இறக்கப்படுகின்றன. மேலும், 159 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 8.77 லட்சம் மக்கள் தொகை என்ற நெருக்கடியும் உள்ளது. இதனால், சுற்றுச்சூழல் மாசு அதிகளவு உள்ளது.
திருப்பூரில் எங்கு பார்த்தாலும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. சாக்கடை கழிவுகள் நேரடியாக நீர் நிலைகளில் கலந்து, நீர் நிலைகளை மட்டுமன்றி, நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதித்துள்ளன. நீர் மாசு சராசரியை விட, 3,000 டி.டி.எஸ்., அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், சுகாதாரக்கேடு நிரந்தரமாக உள்ளது. அதேபோல், குறுகிய ரோடுகளில் அபரிமிதமான வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை ஆகிய காரணங்களினால் காற்று மாசும் அபரிமிதமாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளில், 99.07 "மைக்ரோ கிராம்/மீட்டர் க்யூப்' முதல் 184.30 மைக்ரோ கிராம் வரை காற்றில் துகள்கள் கலந்துள்ளன.
காற்றில் சல்பர்-டை-ஆக்ஸைடு அளவு 9.5 மைக்ரோ கிராம் முதல் 14 மைக்ரோ கிராம் வரை உள்ளது. நைட்ரஜன் ஆக்ஸைடு, 21.8 மைக்ரோ கிராம் வரை உள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் பகுதிகளில், காற்றில் மாசு சராசரியாக 172.7 மைக்ரோ கிராம்/ மீட்டர் க்யூப் அளவில் துகள்கள் உள்ளன. ஒலி மாசு, 89.02 "டெசிபல்ஸ்' அளவுக்கு உள்ளது. இவ்வாறு, மனிதன் வசிக்கும் நிலப்பரப்பு, சுவாசிக்கும் காற்று, பயன்படுத்தும் நீர் என பல பகுதிகளிலும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓரளவு தீர்வு காண, மனிதர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பது மரக்கன்றுகள் வளர்ப்பது மற்றும் இருக்கும் மரங்களை காப்பது மட்டுமே. மரங்கள் சுவாசிக்கும்போது, காற்றில் இருக்கும் மாசுக்களையும், கார்பன்-டை- ஆக்சைடு உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கொண்டு, மனிதன் சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் வெளியிடும். ஆனால், திருப்பூர் பசுமை பூங்காவாக இருப்பதற்கு பதில், கட்டட பூங்காவாக மட்டுமே காணப்படுகிறது. தொழில் மற்றும் நாகரீக வளர்ச்சிக்காக, மரங்கள் வெட்டப்பட்டு, பல அடுக்குமாடி கட்டடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், காற்றின் மாசு அபரிமிதமாக உயர்ந்து, சுவாசிக்க நல்ல காற்று கிடைக்காத அவல நிலை உள்ளது. மனிதன் சுவாசத்தை பாதித்து பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதோடு, காற்றில் கலந்துள்ள துகள்கள், கரும்புகை உடம்பில் ஒட்டுவதை நாம் உணரலாம்.மற்ற நகரங்களை ஒப்பிடும்போது, திருப்பூரில் வழக்கமான அளவைவிட, கூடுதல் மரங்கள் இருக்க வேண்டியது அவசியம். போதியளவு மரங்கள் இருந்தால் மட்டுமே காற்று மாசு ஏற்படுவதை ஓரளவு தவிர்க்க முடியும். இதற்கு தீர்வு காண, திருப்பூரில் மரக்கன்றுகள் நடுவதையும், பராமரிப்பதையும் முதல் கடமையாக கொள்ள வேண்டும்.
மரங்களுக்கு தேவை பாதுகாப்பு: திருப்பூரில் பெரும்பகுதி மரங்கள் வெட்டப்பட்டுள்ள நிலையில், சில ரோடுகள் மற்றும் சில பகுதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மரங்கள் உள்ளன. இம்மரங்களும் அவ்வப்போது வெட்டப்பட்டு வருகின்றன. மேலும், மரங்கள் அனைத்தும் விளம்பர தட்டிகள் அடிக்கும் மையங்களாகவும் உள்ளன. நன்கு வளர்ந்து நிழல் தரும் இம்மரங்களில் விளம்பர தட்டிகள் மாட்டுவதற்காக, ஆணிகள் அடித்து காயப்படுத்தப்படுகின்றனர். ஒரே மரத்தில் நூற்றுக்கணக்கான தட்டிகள் அடிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் நகரிலுள்ள மரங்கள் அனைத்திலும் இலைகள், கிளைகளை விட அதிகமாக ஆணிகளும், விளம்பர தட்டிகளும் உள்ளன. இவ்வாறு ஆணிகள் அடிக்கப்படுவதால் மரங்கள் தொடர்ந்து நிலைக்க முடியாமல், மாண்டு வருகின்றன. எனவே, மரங்களை காப்பாற்ற விளம்பர தட்டிகள் அடிப்பதை தவிர்க்க வேண்டும்.
காற்று மாசு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் திருப்பூரில் மரங்கள் வளர்ப்பதை முதல் கடமையாக கொள்ள வேண்டும். கலெக்டராக சமயமூர்த்தி இருந்தபோது, இப்பிரச்னையை உணர்ந்து, "பசுமை திருப்பூர்' திட்டத்தை செயல்படுத்தினார். பொதுமக்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அரசு நிறுவனங்களில் மரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்ததோடு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தினார். இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டனர். தொழில் நிறுவனங்கள் போதிய அக்கறை காட்டாதது, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன் வராதது, மரக்கன்றுகள் வைப்பவர்கள், தொடர்ந்து சில ஆண்டுகளாவது பராமரிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் கைவிட்டது. இதனால், "பசுமை திருப்பூர்' திட்டம் வளராமல், முளையிலேயே கருகிவிட்டது. இனிமேலாவது மாவட்ட நிர்வாகம், பசுமை திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் இடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்கள், ரோடுகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட அளவு இலக்கு நிர்ணயித்து, மரக்கன்றுகள் நட்டு, தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.
அதிக வருவாய் உள்ள தொழில் நிறுவனங்கள், நகர பகுதிகளில் இடம் இல்லாவிட்டாலும், புறநகர் பகுதிகள், நொய்யல் கரையோரங்களில் குறிப்பிட்ட பரப்பளவில் மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு துறைகள் மட்டுமன்றி, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இதை சமூக அக்கறையாக கொண்டு, திருப்பூரின் சுற்றுச்சூழலை காப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
No comments:
Post a Comment