Thursday, 22 December 2011

திருப்பூரில் போலி சாமியார் ; பொதுமகள் புகார்

திருப்பூர் அருகே பெண்களை தோஷம் போக்க
 
 அழைக்கும் போலி சாமியார்;
 
 நடவடிக்கை எடுக்க
 
 தாசில்தாரிடம் புகார்
திருப்பூரை அடுத்துள்ள 15 வேலம்பாளையம் திரு.வி.க. வீதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் திருப்பூர் தாசில்தார் சந்தியாவை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-  
 
திரு.வி.க. வீதியில் மணிவாசகம் என்பவரும் அவரது குடும்பத்தாரும் தார்சாலையை ஆக்கிரமித்து தென்னை ஓலையால் மறைத்து சாமி கோவில் என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த ரோட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்வதற்கும், நடந்து செல்வதற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள மின் கம்பத்திற்கு கீழ் பெரிய பீடம் கட்டி உள்ளனர். அங்கு பக்தர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வந்து மது அருந்துவதும், அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு செல்லும் பெண்களை கிண்டல் செய்வதும் நடந்து வருகிறது.
 
கோவில் குரு என்ற பெயரில் உள்ள போலி சாமியார் மணிவாசகம் இரவு பூஜை என்ற பெயரில் மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை சங்கு மற்றும் மாட்டு கொம்புகளில் ஊதி சத்தம் எழுப்புவது, தப்பட்டை அடிப்பது, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிப்பது பொது மக்களுக்கு இடைஞ்சலாக உள்ளது.
 
சாமியார் பலர் அறிய மது அருந்திய நிலையில் மாமிசம் சாப்பிட்டும், சுருட்டு பிடித்தும் வருகிறார். இதனால் எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகள் பயத்துடன் வாழும் சூழ்நிலை உள்ளது. சாமியாரை கண்டு பயந்த குழந்தைகள் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  
 
போலி சாமியார் மணிவாசகம் வீட்டில் ஆண்கள் இல்லாத சமயம் பெண்களிடம் உங்களுக்கு தோஷம் இருக்கிறது. என்னோடு வாருங்கள் சரி செய்கிறேன். இல்லை என்றால் செத்து விடுவீர்கள் என மிரட்டுகிறார். மேலும் நான் சுடுகாட்டு மந்திரவாதி உங்களுக்கு செய்வினை வைத்து கொன்று விடுவேன் என்றும் மிரட்டுகிறார். அவருக்கு துணையாக இருக்கும் மணிவாசகத்தின் தாயாரும் எங்களை மிக மிக தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுகிறார்.
 
செய்வினை எடுக்க ரூ. 5 ஆயிரம் கேட்கிறார். பணம் தர முடியாது என்றால் அவர்களது வீடுகளுக்கு முன்பு மந்திரித்த எலுமிச்சை பழம், பூசணிக்காய் போன்றவற்றை போட்டு விடுகிறார். இதனால் நாங்கள் அமைதி இன்றி அச்சுறுத்தலுடன் வாழ்ந்து வருகிறோம். எனவே போலி சாமியார் மணிவாசகம் மற்றும் அவரது குடும்பத்தார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கோவிலையும் அகற்ற வேண்டும். சம்பந்தம் இல்லாமல் இரவில் கோவிலுக்கு வரும் நபர்கன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment