Monday, 26 December 2011

உயிர் பலி வாங்கும் அவிநாசி N H ரோடு

                           


    சேலத்தில் துவங்கி கோழிக்கோடு வரையிலான என்.எச்., 47 ரோடு, அவிநாசி வழியாக செல்கிறது. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், இந்த ரோட்டை கடக்கின்றன. ஆனால், அதற்கேற்ற தரத்தில் ரோடு வசதியில்லை. குண்டும், குழியுமாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டில் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும், தூசி மண்டலமாக இருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், சுவாசக்கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்த்து, இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
"விநாசம்' என்றால் அழிவு என பொருள்; அதில், "அ' சேர்த்து "அவிநாசம்' எனும்போது, அழிவில்லாதது என்று பொருள்படும். காலப்போக்கில், "அவிநாசி' ஆகி விட்டது. இது இன்று நேற்றல்ல... ஆயிரம் ஆண்டுக்குமுன் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பற்றி எழுதப்பட்டுள்ள தேவாரப் பாட்டுகளில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. எனவே, என்றுமே அழிவில்லாத ஊர் என்று கோவில் தல புராணத்தில் வர்ணிக்கப்பட்ட அவிநாசிக்கு, தேசிய நெடுஞ்சாலையால் ஏற்பட்டுள்ள பல பிரச்னைகள், அவிநாசி மக்களை அழி வுக்கு கொண்டு செல்லுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை எண் 47, சேலத்தில் துவங்கி, கேரள மாநிலம் கோழிக்கோடு வரை செல்கிறது. தினமும் லாரி, கனரக லாரி, டிரெய்லர், கண்டெய்னர், பஸ், கார்கள் என தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் கடக்கின்றன. அவிநாசி வழியே செல்லும் இச்சாலையின் தரம் குறைந்து கொண்டே செல்கிறது. எங்கு பார்த்தாலும் பெரிய, சிறிய குழிகள், பள்ளங்கள். ரோடு என்பதற்கான இலக்கணத்தை இழந்து தவிக்கிறது. அவ்வப்போது போடப்படும், தரமற்ற "பேட்ஜ்'களால் இன்னும் மோசமான நிலைக்கு ரோடு வந்து விட்டது.
நான்கு/ஆறு வழிச்சாலை பணிகள் துவங்கிய பின், நிலைமை இன்னும் படுமோசமாகி விட்டது. வாரச்சந்தை முதல் ஆட்டையாம்பாளையம் வரை, நிலைமை படுமோசமாகி விட்டது. குழிகளில், அதிலுள்ள மண்ணால் ஏற்படும் புழுதி, தாறுமாறான போக்குவரத்து, போக்குவரத்து விதிமுறையை மீறும் வாகன ஓட்டிகள், சாலையை கடக்கும் பாதசாரிகள் என்று ஒட்டுமொத்த குளறுபடிகளால், பரிதாப நிலையில் என்.எச்., ரோடு உள்ளது.
புழுதிப்படலத்தால் ஆபத்து: புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் சீனிவாசபுரம் வரை வாகனங்களின் தாறுமாறான "பயணத்தால்' ஏற்படும் புழுதி மண்டலம், அவிநாசி மக்களை பல நோய்களுக்கு ஆட்படுத்தி வருகிறது. ரோட்டின் குழிகளில் கொட்டப்படும் மண் மற்றும் ரோட்டோரத்தில் இருக்கும் மண் ஆகியன நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது காற்றில் பறக்கிறது. அவற்றுக்கு பின்புறம் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், சாலை வழியே நடக்கும் பொதுமக்கள் மூக்கை பொத்திக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
மக்களை கஷ்டப்படுத்தும் இப் புழுதி, கடையிலுள்ள உணவு பண்டங்கள் மீதும் விழுகிறது. ஏற் கனவே, காற்றில் பறக்கும் துகள்களை சுவாசிக்கும் மக்கள், புழுதி படிந்த உணவு பொருட்களை சாப்பிடும்போது ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல நோய்கள் தாக்குகின்றன. மேலும், போக்குவரத்தை சீரமைக்க போலீசார் வைத்துள்ள "டிவைடர்களுக்கு' கீழ் தேங் கும் மண் துகள்களும் புழுதியாக பறந்து மக்களை பாடாய்ப்படுத்துகின்றன.
புழுதிக்கான காரணம்: பஸ் மற்றும் சில வாகனங்களின் அவசரத்தால், முன்னால் செல்லும் வாகனங்களை இடதுபுறம் (வலதுபுறம் டிவை டர்கள் உள்ளதால்) படுவேகமாக முந்திச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, ரோட்டிலிருந்து விலகி, மண் ரோட்டில் இறங்கிச் செல்லும்போது, புழுதி மண்டலம் ஏற்படுகிறது. தற்போது பல இடங்களில் தார் ரோட்டுக்கு பதிலாக மண் ரோடுதான் உள்ளது என்பதும் புழுதிக்கு முக்கிய காரணம்.
அதிகரிக்கும் விபத்துகள்: ரோட்டின் அவலநிலையால், கடந்த மூன்று ஆண்டில் 15 பேர் வரை பலியாகி உள்ளனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் குழிகளில் விழுந்து பலத்த காயங்களுக்கு ஆட்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் கண்ணை மூடச்செய்யும் அளவுக்கு அதிகளவில் ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் வாகனங்களால், ரோட்டின் குழிகளில் இரு கர வாகனத்தை செலுத்தும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
மழை பெய்தால், புழுதி மறைந்து, சேறாகி, நடக்கவே முடியாது; வெயிலடித்தால் மண் நன்றாக காய்ந்து, வாகனங்களில் அறைபட்டு துகள்களாக மாறி புழுதியாகி விடுகிறது. பருவ நிலை எப்படி இருந்தாலும், அவிநாசி மக்கள் அனுதினமும் அல்லல்படுவது தொடர்கதையாகி விட்டது.
மீண்டும் உயிர் பலி: என்.எச்., 47ல் புதிதாக தார் ரோடு அமைக்க, அனைத்து கட்சியினர், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த வாரம் ரோட்டை ஆய்வு செய்த கலெக்டர் மதிவாணன், புதிதாக ரோடு போடுமாறு உத்தரவிட்டார். அடுத்த நாளே சில இடங்களில், சில அடி தூரம் மட்டும் ரோடு அமைக்கப்பட்டது. இருப்பினும், புழுதி குறைந்தபாடில்லை.
குறிப்பாக, ரோட்டுக்கு இருபுறம் உள்ள மண் மற்றும் ரோட்டுக்கு நடுவே உள்ள டிவைடர்களுக்கு இடையிலுள்ள கற்கள் மூலம் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. 10 நாட்களுக்கு முன் சைக்கிளில் வந்த அய்யாக்குட்டி, ரோட்டு குழியில் செலுத்தி கீழே விழுந்தார். அப்போது, லாரி ஏறியதில், அதே இடத்தில் இறந்தார். அவரின் மரணத்துக்கு ரோட்டில் இருந்த குழி மற்றும் கற்களுமே காரணம்.
அந்த இடத்தில் இருந்து 10 அடி தள்ளி, நேற்று காலை ஒரு பெண் பலியானார். கோவை - கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி உஷா (45), தனது மகன் விஸ்வகுமாருடன் பைக்கில், பூண்டி சென்று கொண்டிருந்தார்.
சப்-ரிஜிஸ்டர் அலுவலகம் எதிரே சென்றபோது, ரோட்டின் ஓரத்தில் இருந்து தேங்கியிருந்த மண் காரணாக பைக் சாய்ந்தது.
ரோட்டில் விழுந்த உஷாவின் தலை மீது, பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறி, அதே இடத்தில் தலை நசுங்கி இறந்தார். கண்ணெதிரே தாய் இறந்ததை தாங்க முடியாமல், அவரது மகன் விஸ்வகுமார் கதறி அழுதார். ரோடு சீராக இல்லாத காரணத்தால், ஒரே நொடியில் ஒரு பெண் பலியானார். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் ஆட்டையாம்பாளையம் வரையிலான பகுதிகளில் ஆறு பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தீர்வே கிடையாதா? கண்ணிமைக்கும் நேரத்தில், ஒரு பெண் பலியானதில், அவரது குடும்பம் நிலைகுலைந்துள்ளது. மனித உயிர்கள் இவ்வளவு மலிவாக அவிநாசியிலுள்ள என்.எச்., ரோட்டில் பலியாவதை அறிந்த பொதுமக்கள், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். பொதுமக்களும், கட்சியினரும் ரோட்டை சீரமைக்க குரல் கொடுத்தாலும், நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டாலும்கூட, அவர்களின் இறப்புக்கான காரணங்களில் என்.எச்., ரோட்டின் பங்கு மிக முக்கியமாக உள்ளது, அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் நன்றாகவே தெரியும். இருப்பினும், அதை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க யாரும் முன்வராமல் மவுனம் சாதிக்கின்றனர். இனியும், மவுனம் சாதிக்காமல், கைகாட்டிப்புதூர் முதல் ஆட்டையாம்பாளையம் வரை தரமாக ரோடு அமைத்தால் மட்டுமே விபத்துகளும் குறையும்; போக்குவரத்தும் சீராகும்.
இன்று ஆர்ப்பாட்டம்: இப்பிரச் னைகளை சுட்டிக்காட்டி, அவிநாசி வட்டார தி.மு.க.,- மா.கம்யூ., - இந்திய கம்யூ.,- தே.மு.தி.க., மற்றும் ம.தி.மு.க., சார்பில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பெரிய தேர் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. படுமோசமாக உள்ள என்.எச்., ரோட்டை சீரமைத்து, விபத்துகளில் உயிர்கள் பலியாவதை தடுக்க வலியுறுத்தி, மேற்கண்ட கட்சி நிர்வாகிகள் பேசுகின்றனர்.

No comments:

Post a Comment