Tuesday, 20 December 2011

திருப்பூரில் கேரள மாநிலத்தவர் கடை அடைப்பு

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரியும், திருப்பூரில் கேரள மாநிலத்தவர்களின் கடைகள் திங்கள்கிழமை அடைக்கப்பட்டன.தமிழகத்தில் தொழில் புரிந்துவரும் கேரளவாசிகளுக்கும், கேரளத்தில் வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியும், இரு மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்கத் தவறிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், திருப்பூரில் உள்ள கேரள மக்களின் பேக்கரிகள், ஹோட்டல்கள், நகைக் கடைகள், பாத்திரக் கடைகள் உள்ளிட்ட 200-க்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தவரின் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திருப்பூரில், கேரளத்தைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவர் கூறியது:முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், இவ்விவகாரத்தில் கேரள அரசு முரண்டு பிடிப்பதால் இரு மாநில மக்களிடையே நல்லுறவு பாதிக்கப்படுகிறது. உள்நாட்டு மக்களிடையே ஏற்படும் இத்தகைய பிரிவினை எதிர்கால வாழ்க்கையில் அமைதியைச் சீர்குலைக்கும். இப்பிரச்னையை மேலும் பெரிதாக்காமல் கேரள அரசு சுமுகத் தீர்வு காண வேண்டும்.தமிழகத்தில் வாழும் கேரள மக்களுக்கும், கேரளத்தில் வாழும் தமிழக மக்களுக்கும் மாநில அரசுகள் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார். கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

2 comments:

  1. தெடரட்டும் உங்கள் பதிவு
    என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி நண்பரா

    ReplyDelete